×

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

ராமேஸ்வரம், பிப்.10: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் தமிழ்செல்வம் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில், புதுச்சேரி, தெலுங்கானா மாநிலத்தில் வழங்குவது போல் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெண்கள் உட்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் அலுவலகம் நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி வழங்கவில்லை. இதனால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து கலைந்து சென்ற அவர்கள், அலுவலகத்தில் குடியேறி போராட்டத்தை நடத்தினர்.

Tags : taluka office ,Gori ,
× RELATED ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி...